அணங்கு (பகுதி -2) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
அணங்கு (பகுதி -2) -ரித்விக் கட்டக்
(தமிழில் -தீனன்)
மருத்துவர்: அவங்க எல்லாரும் கூட உன்கிட்ட ரேடியோ வழியா பேசுவாங்களா?
சாந்தி: என்ன மாதிரியான ஆள் நீங்க? அவங்களுக்கு ரேடியோ அப்படினா என்னனு கூட தெரியாதுன்னு உங்களுக்கு புரியலையா. எனக்கும் கோகோனுக்கும் மட்டும் தான் அந்த ரேடியோ. உங்களுக்குத் தெரியுமா, நான் கோகோனுக்கு தாய்ப்பால் ஊட்டும்போது அவன் கொஞ்ச நேரத்துலயே குடிக்குறத நிறுத்திருவான். அவனோட சிவந்த பிஞ்சு கைகள் மென்மையான பஞ்சு பந்துங்க மாதிரி சுருண்டுக்கும். அவனுக்கு பல் எதுவும் வளரல. அவன் வெறும் கைக்குழந்தை தான். சில நேரம் அவன் தன்னோட மிருதுவான ஈறு-னால என்ன திடீர்னு கடிப்பான். என் முலை-ல அந்த உணர்வு எனக்கு இன்னும் இருக்கு. தயவுசெஞ்சு என்னை கோகோன்கிட்ட நீங்க கூட்டிட்டு போறீங்களா?
மருத்துவர்: ஆனா எதுக்காக?
சாந்தி: சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு கனவு வரும். அந்தக் கனவு வரும்போதெல்லாம் என்னை முழுசா குழப்பத்துல தள்ளிடும். அப்போலாம் யார்கிட்டயும் எனக்குப் பேசவே புடிக்காது. என் கனவை பத்தி நான் சொல்றேன். அந்தக் கனவுல, வெளிர் நீல நிற வண்ணம் அடிச்ச வீடு ஒன்னு எனக்குத் தெரியும். அந்த வீட்டோட முற்றம் பூராவும் வெள்ளைப் பூக்கள் இருக்கும், அதுக்கு பின்னாடி குங்குமப்பூ நிற சரிவுகளோட, முடிவே இல்லாத பச்சைப் புல்வெளி இருக்கும். நான் கோகொன்-ஐயும், வெண் மேகங்கள் புள்ளிகளா தெரியுற வானத்தையும் அங்க பாப்பேன். வரிசையா இருக்குற உயரமான பனை மரங்களுக்கு அப்பால குறுகலான அஞ்சனா நதி வளைஞ்சு ஓடுற அந்த இடத்துல நானும் கோகோனும் மட்டும் தான் இருப்போம். என் மனசுல உரைச்சு போய் அப்படியே பதிஞ்ச இந்த காட்சி என்ன இன்னும் குழப்பமடைய செஞ்சுகிட்டிருக்கு. ஓ! நான் ஏன் உள்ளுக்குள்ள இவ்ளோ காயம்பட்டு வலியில இருக்கேன், டாக்டர்?
மருத்துவர்: உனக்கு எல்லாம் சரியாகிடும். சிஸ்டர்!
சாந்தி: யாரைக் கூப்பிடுறீங்க நீங்க?
மருத்துவர்: நான் உன் நண்பரை கூப்பிடுறேன். என்னைப்போல இன்னொரு நண்பர். நீ கொஞ்சம் ஓய்வெடுக்க வசதியா அவங்க உன்னை உன்னோட படுக்கையறைக்கு கூட்டிட்டு போவாங்க.
(செவிலி நுழைகிறாள். அவளைப் பார்த்த மாத்திரத்தில் துணுக்குற்றவளாய் அச்சத்துடன், இருக்கையில் இருந்து எழுந்து கொள்கிறாள் சாந்தி.)
செவிலி: எஸ், டாக்டர்?
மருத்துவர்: இவங்களை கேபின்(அறை) நம்பர் 5-க்கு கூட்டிட்டு போங்க. இவங்க கணவர் எங்க?
செவிலி: அவர் வெளிய காத்திருக்காரு.
மருத்துவர்: அவரை உள்ளே அனுப்புங்க. இந்த பெண்மணிய உங்களோட கூட்டிட்டு போங்க.
(சாந்தி மேடையின் இடதுபுறத்திற்கு ஓடுகிறாள்.)
சாந்தி: நீங்களுமா, டாக்டர். நீங்களும் என் எதிரிகள் கூட சேர்ந்துட்டீங்களா? என்னை இந்த சூனியக்காரியோட அனுப்புறீங்களா?
(செவிலி சாந்தியைப் பிடித்து இழுக்க முயற்சிக்கிறாள். அனால் சாந்தி அவளது பிடியை விடுவித்துக்கொண்டு அவளை ஆக்ரோஷமாக தள்ளிவிடுகிறாள்.)
செவிலி: கமலா, கமலா, வா, எனக்கு உதவி பண்ணு.
(தாதி உள்ளே வருகிறாள். சாந்தியை ஒரு புறம் செவிலியும் மறுபுறம் தாதியுமாகப் பிடித்துக் கொள்கிறார்கள். இருவரும் சாந்தியை இழுத்துச் செல்ல, சாந்தி மருத்துவரை சபிக்கத் தொடங்குகிறாள்.)
சாந்தி: நீங்க நரகத்துல எரிவீங்க டாக்டர், நீங்க நரகத்துல எரிவீங்க! உங்க குடும்பமும், உங்க சந்ததிகளும் பூமியில இருந்து தடம் தெரியாம அழிஞ்சு போகும். நீங்க ரொம்ப வலி நிறைஞ்ச சாவ சந்திப்பீங்க. நீங்க விஷம் கொண்ட பாம்பு. என்ன எல்லாத்தையும் சொல்ல வைக்கிறதுக்காக என்கிட்ட ஆறுதலா பேசுற மாதிரி பேசி நல்லா ஏமாத்தி இருக்கீங்க. (அவள் கிரீச்சிட்டு சிரிக்கிறாள்.) நல்ல வேலை, நான் உங்ககிட்ட இன்னும் முக்கியமான கதையை சொல்லல. உங்களால அதை எப்பவும் தெரிஞ்சிக்கவே முடியாது. ஒரு வேளை நான் அதை சொல்லியிருந்தா என்னை இப்போவே உடனடியா தூக்கு மேடைக்கு அனுப்பியிருப்பீங்க.
மருத்துவர்: சிஸ்டர், இவங்க கணவரை உள்ளே அனுப்புங்க.
செவிலி: எஸ் சார்.
(சாந்தியை
அவர்கள் இழுத்துச் செல்கின்றனர். வெளியே கொண்டு செல்லப்படுவதற்கு முன் சாந்தி
மேஜையைப் பற்றிக்கொண்டதில் அதில் இருந்த காகிதங்கள் இடறி கீழே விழுந்து தரையில்
சிதறின. மருத்துவர் அந்த காகிதங்களைப் பொறுக்கி மீண்டும் மேஜையில் அவற்றை
ஒழுங்குபடுத்தி வைக்கிறார். வருத்தம் தோய்ந்த முகத்துடன் கணவன் உள்ளே நுழைகிறான்.
அவனைப் பார்த்த மருத்துவர், மேஜையில் உட்காரும்படி அவனிடம்
கூறுகிறார்.)
மருத்துவர்: இங்க உக்காருங்க. (சிறிய நடுக்கத்துடன், கணவன் மேஜையில் மெதுவாக அமர்கிறான். மருத்துவர் பதிவேட்டைத் திறந்து பார்த்து) நீங்க தானே நகூர்சந்திர தாஸ்? நீங்க பராசத் கிட்ட சிமுல்டஹா-ல தானே இருக்கீங்க?
கணவன்; ஆமா, சார்.
மருத்துவர்: உங்க குடும்பத்துல நீங்க, உங்க மனைவியைத் தவிர வேற யாரெல்லாம் இருக்காங்க?
கணவன்: எனக்கு வேற யாரும் இல்ல.
மருத்துவர்: அது எப்படி?
கணவன்: யாருமே இல்ல. என்னை போல தான் அவளும். அவளுக்கு அம்மா மட்டும் தான் இருந்தாங்க. எங்களுக்குத் திருமணமாகி ரெண்டு வருஷம் ஆச்சு. எங்களுக்குக் திருமணமான கொஞ்ச காலத்துக்கு அப்புறம் என் மாமியார் இறந்துட்டாங்க. அவங்க இறப்புக்குப் பின்னாடி அவளுக்கு ரத்த சொந்தம்னு யாரும் இல்ல. அப்புறம் திடீர்னு, கடந்த சில மாதங்களா - ஓ, எனக்கு என்ன செய்யுறதுனே தெரியல! டாக்டர், நான் குடும்பம்னு சொல்லிக்க சாந்தி ஒருத்தி தான் எனக்கு இருக்கா. எனக்கு அவளைத் தவிர வேற யாருமே இல்ல.
(அவன் அழத் தொடங்குகிறான்)
மருத்துவர்: தயவுசெஞ்சு நிதானமா இருங்க. நீங்க என்கிட்டே முழு கதையையும் சொல்லலேன்னா, அவளுக்கு எப்படி நான் உதவ முடியும்?
கணவன்: நான் என்னோட வேலையை இழக்குற நிலைமைல இருக்கேன். நான் ஒரு சாதாரண கிளர்க். ஒரு பக்கம் சாந்தியை என்னால வீட்டுல தனியா விட்டுட்டும் போக முடியாது. மறுபக்கம் வீட்டையும், வேலையையும் என்னால எப்படி ஒரே நேரத்துல கவனிக்க முடியும்? நான் வேலையில இருக்கும்போது சில நேரம் அக்கம் பக்கத்துல இருக்குறவங்க அவள வந்து கவனிச்சுக்குவாங்க. ஆனா தினமும் அவங்களையே நான் எதிர்பார்க்க முடியாது. வேறு ஒருத்தரோட சுமையை அவங்க ஏன் தங்கள் மேல சுமத்திக்கணும்? இதுக்கெல்லாம் மேல, அவ சில நேரம் யாருமே கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்குவா.
மருத்துவர்: அவ உங்களை பார்க்க கூட விரும்ப மாட்டேங்குறாளே.
கணவன்: எனக்குத் தெரியும். அவ ரொம்ப ரொம்ப வெறுக்குற ஆள் நான் தான். ஆனா எதுவா இருந்தாலும். அவளைக் கவனிச்சிக்க வேண்டியது நான் தான். தாதி-யையோ, உதவியாளரையோ ஏற்பாடு செய்ய எனக்கு வசதி இல்ல. ஒருவேளை நிலைமை கொஞ்சம்கூட சரியாகலேனா நான் என்னோட வேலையை இழந்துடுவேன். இந்த ஆஸ்பத்திரில அவளைச் சேர்க்க நான் நிறைய கஷ்டத்தை எதிர்கொண்டு தான் வந்திருக்கேன். தயவுசெஞ்சு எனக்கு உதவுங்க டாக்டர். நான் உங்ககிட்ட கெஞ்சி கேக்குறேன். நீங்க தான் காப்பாத்த கூடிய ஒரே ஆள்.
(கணவன் கருணைக்காக இறைஞ்சுவது போல் எழுந்து சென்று மண்டியிட்டு மருத்துவரின் பாதங்களை கைகளால் பற்றிக்கொள்கிறாள்.)
மருத்துவர்: அட, இப்போ எழுந்துருங்க. நீங்களே உடைஞ்சு போனீங்கனா, உலகத்துல எந்த டாக்டர்-னாலையும் உங்களுக்கு உதவ முடியாது. உங்க உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திகிட்டு என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.
(கணவன் தன் சமநிலையை மீட்டுக்கொண்டு மீண்டும் இருக்கைக்குத் திரும்புகிறான். மருத்துவர் மெதுவாக நடந்து சென்று, அவனால் பார்க்க முடியாதபடி பீடத்தின் உச்சியை அடைகிறார். கணவன் மருத்துவரைக் கவனிக்காதவனாய், எதிரே அவர் எழுந்த சென்ற காலி இருக்கையைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான்.)
மருத்துவர்: (பார்வையாளர்களை நோக்கி) இப்படித்தான் சாந்தி இங்கு வந்து சேர்ந்தா. இப்போ நான் ஒரு மருத்துவர் மட்டுமல்ல, மனோதத்துவவாதியும் கூட. அதனால தான் மனித மனதின் மிக ஆழமான மூலைகளுக்கு பயணிச்சு அங்கு சிறைப்பட்டிருக்குற வலியை விடுவிக்க வேண்டியது என்னோட பணியா இருக்கு. ஆனா அதற்கும் மேல, நான் ஒரு சமூக விஞ்ஞானி மற்றும் சமூகப் பணியாளர். இது மறக்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்டவர்களோட கதை. இதுபோன்ற பாவப்பட்ட மக்களை மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துறதும் அவர்களை ஒதுக்கி வைத்து தனிமையில் வாட விடுறதும் ரொம்ப தீமையான விஷயம். இதுபோன்றவங்கள புறக்கணித்து அவர்களுக்கு அலட்சியத்தை மட்டுமே இந்தச் சமூகம் பரிசாக வழங்குது. அவங்க மீண்டும் சக மனிதர்களா ஏற்றுக்கொள்ளப்படுறதே இல்ல. இவங்க மீண்டு வர்ரதுக்கு எவ்வளவு தான் குறைந்த சாத்தியக்கூறு இருந்தாலும் அவையும் தீண்டாமைங்குற பாவத்தால அவங்ககிட்ட இருந்து பறிக்கப்படுது. துளியும் இரக்கமில்லாத முறையில புறக்கணிக்கப்பட்ட அவங்களை மனிதநேயமற்ற முறையில அணுகுறது அவங்களோட துயரத்தை மேலும் ஆழப்படுத்த மட்டுமே செய்யும். இதுபோன்றோரை மீண்டும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பச் செய்து அவங்க தங்களோட கனவுகளை வடிவமைக்க உதவுறதுதான் எனக்கு இருக்கிற பணி. இப்போ சாந்தியின் கணவன்கிட்ட இருந்து தொடங்குவோம்.
(மருத்துவர் தனது இருக்கைக்கு திரும்புகிறார். கணவன் தனது தலையைத் தாழ்த்தியவாறு அமர்ந்திருக்கிறான். மருத்துவர் வந்ததைப் பார்த்ததும் அவன் மேலே நிமிர்ந்துப் பார்க்கிறான்)
மருத்துவர்: உண்மையில என்ன நடந்தது? தொடக்கத்தில் இருந்து நீங்க சொல்லனும். டாக்டர் கிட்ட எதையும் மறைக்க கூடாது.
(கணவன் தன்னைக் கட்டுபடுத்திக்கொள்ள நினைக்கிறான், ஆனால் அவனால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. தனது முகத்தை கைகளால் மூடிக்கொள்கிறான்)
கணவன்: (கண்டிப்பான தொனியில்) நிமிர்ந்து உட்காந்து நேராக பாருங்க. உங்களை நோயாளி போல நான் நடந்தணும்னு எதிர்பார்க்காதீங்க. நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
(கணவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான்.)
கணவன்: சரி, கேளுங்க.
மருத்துவர்: உங்களுக்குத் திருமணமாகி எவ்வளவு காலம் ஆகுது?
கணவன்: ரோமன் காலண்டர் படி, இரண்டு வருடம் எட்டு மாசம் ஆகுது. பாங்ளா காலண்டர் படி, இது இருபத்தைந்தாவது பைசாக், பாங்ளா காலண்டரின் முதல் மாசம்.
மருத்துவர்: திருமணத்திற்கு முன்னாடியே உங்க மனைவியை உங்களுக்குத் தெரியுமா?
கணவன்: இல்லை. அவங்க பிர்ப்ஹும்-ல குடியிருந்தாங்க. அவளோட தாயாருக்கு சிலரைத் தெரியும். எனக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது, நான் ஹாரென்பாபுவின் கடையில கிளர்க் ஆக இருந்தேன். அதனால...
மருத்துவர்: .... அவங்க தங்கள் பெண்ணைத் தர நீங்க தகுதியானவர், நிலம் வைச்சிருக்குறவர்னு அவங்க நினைச்சாங்க.
கணவன்: ஆமா, அதுமாதிரி தான்.
மருத்துவர்: உங்க மனைவியிடத்தில இதுக்கு முன்னாடி ஏதாவது வித்தியாசமாக கவனிச்சீங்களா?
கணவன்: இல்லை. ஆனால் அவளோட ஒரே சகோதரி, பதினான்கு, பதினைந்து வயசுல தற்கொலை செஞ்சுக்கிட்டானு அப்புறம் எனக்கு தெரியவந்துச்சு. அவளோட இந்த சகோதரி, கொஞ்சம் எதுலயோ தொலைஞ்சு போனது மாதிரி இருந்ததாகக் கேள்விப்பட்டேன். அவ எந்நேரமும் கடவுள் காளி மற்றும் லக்ஷ்மியை கும்பிட்டுக்கிட்டே இருப்பாளாம். சாந்தியைப் பொறுத்தவரை அவள் வெளிர் நீல வண்ணம் தீட்டிய வீட்டை பத்தி பேசிக்கிட்டிருப்பா, குறிப்பா எங்க மகன் பிறந்ததுக்குப் பிறகுதான். அவ எப்போதும் தன்னோட சொந்த சிந்தனைகளிலேயே மூழ்கியிருப்பா. அவ மனசுல என்ன ஓடிக்கிட்டிருக்குனு என்னால கண்டுபிடிக்கவும் முடியாது, அதற்காக அதிகம் முயற்சிக்கவும் மாட்டேன். நாள் முழுக்க வேலை செஞ்சு களைப்படைஞ்ச நான் கொஞ்சம் ஓய்வை மட்டுமே விரும்புவேன். ஆனா அதேநேரம் சாந்தி ரொம்ப பணிவான பொண்ணு, அக்கம் பக்கத்தினர் அவ மேல பிரியமா இருந்தாங்க.
மருத்துவர்: அப்புறம்?
கணவன்: அதுக்கப்புறம் கோகோன்(ஆண் குழந்தை) எங்க வாழ்க்கையில வந்தான். கோகோனை அவளோட மடியில வைச்சிகிட்டு அவ பாடல்கள் பாடுவா. இந்தப் பாடல்கள் எல்லாம் அவளே உருவாக்குனது.
(மேடையில் நிசப்தம் குடிகொள்ள, மருத்துவரும், கணவனும் பேசுவதை நிறுத்தினர். அவர்களுக்கு மேலே இருக்கும் விளக்கின் ஒளி மங்கி முற்றாக இருளடைகிறது. இருளில் இருந்து ஒரு கூர்மையான ஒளிக்கீற்று மேடையில் சாந்தியை நோக்கி வெளிச்சம் பாய்ச்சுகிறது. அவள் தனது மகனை தூங்க வைக்கும் பாவனையில் தாலாட்டுப் பாடல் ஒன்றைப் பாடுகிறாள்.)
(பாடல்)
அன்பு மகனே, செல்ல மகனே
இனியும் நீ அழ வேண்டாம்
தூக்க தேவதை வந்துகொண்டிருக்கிறாள்
கதவைத் திறப்போமாக
தூங்கு என் குட்டிக் கண்ணா
அவள் வந்துகொண்டிருக்கிறாள்.
இனியும் அழாதே, கண்களை மூடு
விடிந்த பின்னே நீ எழுவாயாக..
(சாந்தி பாடியபடி மேடையை விட்டு வெளியேறுகிறாள். மருத்துவர் மற்றும் கணவன் இருக்கும் இடம் மீண்டும் வெளிச்சமடையத் தொடங்குகிறது.)
மருத்துவர்: அப்புறம் என்ன ஆச்சு?
கணவன்: கோகோன் நோய்வாய்ப்பட்டான். அவனுக்குத் தீவிர வலிப்பு கண்டது. அவனோட நோய் தீவிரமாகி ரொம்ப பலவீனமடைஞ்சான். முதலில் வீட்டிலயே சில மூலிகை மருந்துகளை முயற்சித்துப் பாத்தோம், ஆனா எதுவும் வேலை செய்யல. அப்புறம் நாங்க பஸ்ராத்-ல இருந்து டாக்டரைக் கூப்பிட்டு வந்தோம். ஆனாலும் கோகோனோட உடல்நிலையில எந்த மாற்றமும் இல்ல. அப்புறம் (பெருகி வரும் கண்ணீரை உடனே கட்டுப்படுத்திக்கொண்டு) கோகோன் இறந்துட்டான். ஆனா சாந்தியால கோகோனை விட முடியல. அவன் வெறும் ஒன்றரை மாச குழந்தை. அவன தன்னோட கைகள்-லயே தொடர்ந்து மூணு நாளா ஏந்தியிருந்தா. நான் வலுக்கட்டாயமா அவகிட்ட இருந்து அவன பறிக்க வேண்டியதாயிடிச்சு. கோகோனைத் தகனம் செஞ்சிட்டு நான் வீட்டுக்கு திரும்பி வந்தப்போ, சாந்தி கண்ணுல பயத்தோட என்னைப் பார்த்தாள். அப்போ இருந்து கோகோன் மறைவுக்கு நான் தான் காரணம்னு அவ மனசுல பதிஞ்சிருச்சு. டாக்டர், என்னோட வாழ்க்கை இப்போ தாங்கிக்க முடியாததா ஆகிடுச்சு. எனக்கும் எல்லாரையும் போல கனவுகள் இருந்துச்சு. ஆனா என்னோட எல்லா விருப்பங்களும் காணாம போச்சு.
மருத்துவர்: சரி. இப்போ நீங்க போகலாம். சேர்ந்த முதல் ஏழு நாளைக்கு இங்க நோயாளிகள பார்க்க உறவினர்களுக்கு அனுமதி இல்லைங்கறத உங்களுக்கு நான் தெரியப்படுத்திக்கிறேன். உங்கள பாத்ததும் அவ ஆக்ரோஷமா நடத்துகிறத பாக்கும்போது நாங்க சொல்ற வரையும் நீங்க இங்க வர வேண்டாம். அப்புறம், அவளோட அன்றாடத் தேவைக்கான பொருட்களைக் கொண்டு வந்துருப்பீங்கனு நம்புறேன்.
கணவன்: ஆமாம்.
மருத்துவர்: அப்போ நல்லது. நீங்க இப்போ போகலாம்.
(செவிலி நுழைகிறாள்.)
கணவன்: சிஸ்டர், அவளுக்கு இந்த மருந்துகளைக் கொடுங்க (அவளிடம் மருந்துகளைக் கொடுக்கிறான்.) அப்புறம் அவளை சாயங்கால நேரங்கள்ல வெளிய தோட்டத்துல நடக்குறதுக்கு அழைச்சுட்டு போங்க. நீங்களும் பொண்ணுங்கறதுனால எங்ககிட்ட சொல்லாதத அவ உங்ககிட்ட சொல்லலாம். ஆனா அவ பதட்டமடையாம இருக்குற மாதிரி பாத்துக்கோங்க. (மருத்துவரிடம் பேசுகிறான்.) ---- டாக்டர், அவ குணமாகிடுவாள.
டாக்டர்: இன்னும் நீங்க இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? உங்களை நான் போக சொன்னேன் தானே?
கணவன்: ஆனா....
மருத்துவர்: இந்த ஆனா, ஏன்-லாம் வேண்டாம். நீங்க இப்போ போயே ஆகணும். மத்ததை எங்ககிட்ட விடுங்க.
(கணவன் சோகமாக வெளியேறுகிறான்.)
மருத்துவர்: இது மாதிரி கேஸ் ரொம்ப சாதாரணமானது தான்.
செவிலி: ஆமா, ரொம்ப சாதாரணமான கேஸ்.
மருத்துவர்: ஆனா உனக்குத் தெரியுமா, இதுமாதிரி கேஸ்கள் தான் என்னைத் தொடர்ந்து வேலை செய்ய வைக்குது. ஏன்னு தெரியல, ஆனா சாந்தி மாதிரி நோயாளிகள் எனக்கு ரொம்ப முக்கியமா படுறாங்க.
தாதி: சார் நோயாளி திடீர்னு ரொம்ப மிரண்டு போயிருக்காங்க. சித்தபிரம்மை அதிகமா இருக்கு. அவங்கள அறைக்குள்ளயே தடுத்து வைக்குறதுக்கு கஷ்டமா இருக்கு. ரொம்ப சத்தமா கூச்சல் போட்டுக்கிட்டு இருக்காங்க.
(மருத்துவர் எழுந்து நிற்கிறார்.)
மருத்துவர்: ஊசிய தயார் பண்ணி என்கிட்ட கொண்டு வாங்க, உடனே!
(பார்வையாளர்களுக்கு
சாந்தியின் கூச்சல் கேட்கிறது. மருத்துவரும், செவிலியும்
மேடையை விட்டு வெளியேறுகின்றனர். சாந்தி பீடத்தின் மேல் ஏறி நிற்கிறாள்.)


கருத்துகள்
கருத்துரையிடுக